வன்கொடுமை விவகாரம் : FIR கசிந்தது எப்படி? விளக்கம் கொடுத்த NIC!
வன்கொடுமை சம்பவத்தில் மாணவி கொடுத்த புகாரின் FIR லீக்கானது குறித்து தேசிய தகவலியல் மையம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்தனர்.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை முதலில் எழுந்த நிலையில், அது நிகாரிக்கப்பட்டு இவ்வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணையை தீவிரப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டடது.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு ஒன்று தாக்கலும் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்த வழக்கில் மாணவி கொடுத்த புகார் இணையத்தில் வெளியானதாக வந்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், எப்படி லீக்கானது என அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரும் கேள்விகளை எழுப்பினார்கள். இதனையடுத்து, காவல்துறை தரப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக FIR லீக் ஆகியிருக்கலாம் என விளக்கம் அளித்திருந்தார்கள்.
அதனைதொடர்ந்து தற்போது தேசிய தகவலியல் மையம் (NIC) இந்த வழக்கில் FIR லீக்கானது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ” IPC இல் இருந்து BNS குற்றவியல் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் FIR கசிந்ததாக தமிழ்நாடு அரசுக்கு, தேசிய தகவல் மையம் பதில் அளித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் வழக்கில் பதியப்பட்ட FIR எப்படி வெளியானது என்பதை ஆய்வு செய்திருக்கிறோம் எனவும் விளக்கம் அளித்துள்ளது.