ராமநாதபுரம் மீனவர்கள் நல மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்!
ராமநாதபுரம் மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்கள் நல மாநாட்டில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செயல்படுத்தப்பட்டுள்ள தமிழக அரசின் திட்டங்கள், மீனவர்கள் நலன், கச்சத்தீவு மீட்பு, இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது என பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்றினார். இதில் பாஜக அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் முன்வைத்தார். அதுமட்டுமில்லாமல் மீனவர்கள் மாநாட்டில் மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார் முதல்வர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்:
- மீனவர்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 5,035 மீனவர்களுக்கு பட்டா வழங்கப்படும்.
- 45,000 மீனவர்களுக்கு மீன்பிடி தொழிலுக்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்படும்.
- மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- நாட்டுபடகு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 3,700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
- விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 19,000 லிட்டராக உயர்த்தப்படும்.
- தூத்துக்குடி, நெல்லை மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு 3,400 லிட்டரில் இருந்து 3,700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
- நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் 4,400 லிட்டராக உயர்த்தப்படும்.
- 60 வயதானவர்களுக்கு மீன்பிடி நிவாரணத்தொகை வழங்கப்படும்.
- தங்கச்சிமடம் மீன்பிடித் துறைமுகம் மற்றும் பாம்பனில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்கப்படும்.
- மீனவ கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கப்படும்.
- காணாமல்போன மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூ.250 லிருந்து ரூ.350 ஆக உயர்த்தப்படுகிறது.
- புதிய திட்டங்களுக்காக ரூ.926 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது எனவும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் தெரிவித்தார்.