இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் துணை நிறுவனங்களில் அறிவியலாளர் பணியிடங்களுக்கான ஆள் தேர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது.உயர்நிலை அறிவியலாளர் பணிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, அதன் துணை நிறுவனங்களான புனே தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம், தில்லியில் உள்ள தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் காலியாக உள்ள சி மற்றும் டி நிலையிலான அறிவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களை நிரப்புவதில் எந்த பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் சி, டி மற்றும் டி நிலை மருத்துவ அறிவியலாளர் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டு விதிகள் பொருந்தாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.இந்த விளக்கம் பொருத்தமற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.
இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதியும், திறமையும் பின்னுக்குத் தள்ளப்படுவதாக கூறப்படுவதே சமூகநீதிக்கு எதிரான சதியாகும். இட ஒதுக்கீடு எந்த வகையிலும் தகுதியை பாதிப்பதில்லை என்பது பல்வேறு தருணங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சில நிறுவனங்களை இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பது என்ற கொள்கை திருத்தப்பட வேண்டும். மத்திய அரசின் அனைத்து நிறுவன வேலைவாய்ப்புகளிலும், மத்திய அரசின் அனைத்துக் கல்வி நிறுவங்களிலும் அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு முழுமையான இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்; அதன் மூலம் சமூகநீதியை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.