பாஜக கூட்டணியில் இருந்து பாமக விலகலா.? டாக்டர் ராமதாஸ் விளக்கம்.!
தனது சமூக வலைதள பதிவு எதேச்சையாக பதிவிட்டது தானே தவிர அதில் அரசியல் கருத்து இல்லை. கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவெடுப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
சென்னை : சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கம் வாயிலாக தற்கால அரசியல் சூழலுக்கு ஏற்ற கருத்துக்களை பதிவிட்டு வருவது வழக்கம். சில சமயம் நேரடியாக தனது கருத்துக்களை கூறுவார். சில சமயம் மறைமுகமாக தனது கருத்துக்களை கூறுவார்.
அப்படி தான், அவர் கடந்த 3ஆம் தேதி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்து, பாமக கூட்டணி குறித்த கேள்விகளை பலமாக எழுப்பியது. பாஜகவுடன் கூட்டணி முறிந்து விட்டதா என்றெல்லாம் பேச்சுக்கள் எழத் தொடங்கிவிட்டன. டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என “காலப் போக்குக்கும் தேவைக்குமேற்ப ஏற்படும் மாற்ற, தருத்தங்களைத் தன்னுள் கொண்டு தமிழ் வளர்ந்துவருகிறது. ” என்ற பொருள் படும்படியான நன்னூல் வாக்கியத்தை பகிர்ந்து இருந்தார்.
இதனை குறிப்பிட்டு, கடந்த 2024 மக்களவை தேர்தலில் பாமக , பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், பாஜக – பாமக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதனால், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுவதை குறிப்பிடும் வகையில் தான், பழையன கழிதலும் எனும் கூற்றை ராமதாஸ் பதிவிட்டுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு எழுந்தது.
இதுகுறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ” பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற கூற்றுக்கும், அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இது நன்னூல் சூத்திரம். யாருக்கும் முழுமையாக புரியாததால் அதை முழுமையாக பதிவிட்டேன். இந்த நன்னூல் நூற்பாவின் விளக்கம் என்னவென்றால், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதில் தவறில்லை. உதாரணமாக, மரத்தில் கொழுந்தாக உள்ள இலை, பழுத்த பிறகு, அந்த இலை விழுந்தால் அதில் தவறில்லை. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால் அப்போது பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்.” என்று அவர் விளக்கம் அளித்தார்.