ராமதாஸ் – முதல்வர் விவகாரம் : பதில் சொல்ல மறுத்த விசிக தலைவர் திருமாவளவன்!
ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் செய்திருந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார் இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இந்த கேள்விக்கு “அவருக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதேனும் ஒரு அறிக்கை விடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” என கூறிவிட்டு முதல்வர் ஸ்டாலின் சென்றார்.இந்த விவகாரம் பெரிய பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், எங்கள் தந்தை ராமதாஸ் ஐயாவை அவமானப்படுத்திவிட்டார் முதலமைச்சர், அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.
அவரை தொடர்ந்து அடுத்ததாக தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் முதல்வர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்கள். அதே சமயம், பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்கக் கோரி, பாமக வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
எனவே, இந்த விஷயம் சர்ச்சையாக வெடித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிற விஷயம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரிடம் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. அப்படி இன்று விசிக தலைவர் திருமாவளவனிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், பதில் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இன்று, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாளையொட்டி, அவரது சென்னையில் உள்ள அவருடைய சிலைக்கு மரியாதை செலுத்திய பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என பாமகவினர் போராடி வருவது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்டார். அதற்கு பதில் கூறிய திருமாவளவன்கருத்துச் சொல்ல விரும்பவில்லை” என்று பதிலளித்தார்.