ரஜினியின் கட்சி தொடக்க விழா.. மதுரையில் நடத்த திட்டம்?
நடிகர் ரஜினி ஜனவரி மாதம் கட்சி ஆரமிக்கவுள்ள நிலையில், அக்கட்சியில் தொடக்க விழாவை மதுரையில் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், ஜனவரியில் தாம் கட்சி தொடங்குவதாகவும், அது தொடர்பான அறிவிப்புகளை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பிற்கு அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து கட்சி தொடங்குவது தொடர்பான பணியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ள நிலையில், அந்த பொதுக்கூட்டத்தை எங்கு நடத்துவது என்று அக்கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி மற்றும் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்பொழுது சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் கட்சி தொடக்க விழாவை நடத்தலாம் என கூறப்பட்டதாகவும், இதில் மதுரையில் கட்சி தொடக்க விழா நடத்தவுள்ளதாகவும், அதில் கட்சியின் பெயர், சின்னம், தேர்தல் பிரச்சார பயண திட்டம், கட்சியின் கொள்கை ஆகியவற்றை ரஜினிகாந்த் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.