துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!
"என்னிடம் அரசியல் குறித்த கேள்விகளை கேட்காதீர்கள்." என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் துணை முதலமைச்சர் பதவியை உதயநிதிக்கு அளிப்பது பற்றி நடிகர் ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் எழுப்பினர். இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த நடிகர் ரஜினிகாந்திடம் துணை முதல்வர் விவகாரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.” என அரசியல் கேள்வியை முற்றிலும் தவிர்த்துவிட்டு நகர்ந்து சென்றார்.
மேலும், அவர் நடித்து முடித்துள்ள வேட்டையன் படம் பற்றிய கேள்விக்கு, “படம் நல்லா இருக்கிறது” என்று மட்டும் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.
சில வருடங்களுக்கு முன்னர், தான் அரசியலுக்கு வரவுள்ளதாக அறிவித்திருந்து, பின்னர் தனது உடல்நிலை கருத்தில் கொண்டு அதில் இருந்து பின்வாங்கினார் நடிகர் ரஜினிகாந்த். அதன் பிறகு, தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் திமுக மூத்த அமைச்சர்கள் , முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்துகொள்ளும் அரசியல் சாராத நிகழ்வுகளில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். இதன் காரணமாகவே உதயநிதி பற்றிய கேள்விகள் ரஜினிகாந்திடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.