“பழைய மாணவர்கள்..” “பல்லு போன நடிகர்கள்..” சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்.!

Udhayanidhi Stalin Durai Murugan Rajinikanth

சென்னை : துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர் அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகன் பற்றி பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. விழாவில் பேசிய அவர் ” ஒரு கட்சியில் தலைவர் மறைந்த பிறகு அந்த கட்சியைக் சரியாக கட்டிக் காப்பாற்றுவது என்பது மிகவும் கஷ்டம் என அனைவருக்கும் தெரியும்.

ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை அருமையாக செய்து வருகிறார். ஒரு பள்ளியில் புதிய மாணவர்களை ஆசிரியர் சமாளித்துவிடுவார். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம். அதே போல திமுகவில் துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரிடம் ஏதாவது விஷயத்தை பற்றி கேட்டால் “அப்படியா? சந்தோசம்” என்று கூறுவார். அவர் நல்லா இருக்கு என்று சந்தோஷத்தில் சொல்கிறாரா? ஏன் இப்படி பண்றீங்க என்கிற வகையில் அப்படி சொல்கிறாரா? என ஒண்ணுமே புரியாது” என பேசி இருந்தார்.

தனது பாணியில் துரை முருகன் பதில்

துரைமுருகன் எப்போதுமே தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நகைச்சுவையாக ‘தக் லைஃப்’ பதில் அளிப்பது வழக்கம். அப்படி தான் ரஜினிகாந்த் தன்னை பற்றி பேசிய விஷயத்திற்கு பதில் கொடுத்து இருந்தார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினி பேச்சு பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த துரைமுருகன் ” அரசியல் போல சினிமாவிலும் மூத்த நடிகர்கள் பல்லு போன வயதிலும் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது” என தனது பாணியில் பதில் அளித்தார்.

உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

ரஜினி பேசியதை வைத்து சூசகமாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ” நேற்றைய நிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பேசும்போது எதற்கு அதிக கைத்தட்டல் எழுந்தது? நான் அதை சொல்லக்கூடாது உங்களுக்கே அது தெரியும் நீங்களே கேள்வி பட்டிருப்பீர்கள். நான் சொன்னால் எதோ மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறேன் என சொல்வார்கள்.

தொலைக்காட்சியில் நீங்களே பார்த்திருப்பீர்கள் ‘ஓல்ட் இஸ் கோல்டு’ நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இளைஞர்களின் சார்பாக “இந்த வரவேற்பை பார்த்துவிட்டு இனிமேல் வருடாவருடம் இந்த பேச்சுப்போட்டியை நடத்தவேண்டும் என்று” என கூறினார். தொடர்ந்து பேசிய உதயநிதி திமுகவில் சேர பல இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். நாம் தான் அவர்களுக்கு வழிவிட்டு அரவணைத்து வழிநடத்தி கைப்பிடித்து கூட்டிச் செல்ல வேண்டும்

ரஜினிகாந்த் மேடையில் பேசியதையும், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசியதையும் வைத்துக்கொண்டு அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளத்திலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அமைச்சர் துரைமுருகனை ரஜினி மேடையில் கலாய்த்துவிட்டார். துரைமுருகன் ரஜினிக்கு பதிலடி கொடுத்துவிட்டார். இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என சூசகமாக உதயநிதிகூறுகிறார் என பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் உலா வந்தன.

துரைமுருகன் என்ன சொன்னாலும் வருத்தம் இல்ல

இப்படியான சூழலில் இந்த வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் துரை முருகன் பேசியதை குறிப்பிட்டு கருத்து கூறினார் .

ரஜினிகாந்த் பேசுகையில், ” துரைமுருகன் நீண்டகால நண்பர். அவர் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் இல்லை. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். எங்கள் நட்பு எப்போதுமே தொடரும்” என கூறிவிட்டு சென்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்