நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!
ஜெயலலிதாவை எதிர்க்க சில காரணங்கள் இருந்தாலும் ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதும் ஒரு காரணம் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்,

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் – மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு செய்திகள் உலா வரும். இந்த உரசல் போக்கை மையமாக வைத்து தான் படையப்பா படத்தில் பெண் வில்லி கதாபாத்திரத்தை ரஜினிகாந்த் வடிவைமைக்க சொன்னார் என்றெல்லாம் பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன.
இப்படியான சமயத்தில், நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். கடந்த வரும் ஏப்ரல் 9-ல் உயிரிழந்த அதிமுக மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் பற்றிய டாக்குமென்டரியில் அவரது நினைவுகள் பற்றி பலரும் தங்கள் நினைவலைகளை பகிர்ந்து உள்ளனர்.
இந்த டாக்குமென்டரி வீடீயோவில் நடிகர் ரஜினிகாந்த், ஆர்.எம்.வீரப்பன் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில், தான் நடித்த பாட்ஷா திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் ஆர்.எம்.வீரப்பன் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் அதிமுகவில் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தார்.
அந்த விழாவில் நான் பேசுகையில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினேன். மேடையில் ஆர்.எம்.வீரப்பன் இருந்தார். இதனை அடுத்து ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா நீக்கிவிட்டார் என அறிந்தேன். அமைச்சர் மேடையில் இருக்கும் போதே ஒருவர் அரசை விமர்சித்து பேசியுள்ளார். அப்போது அமைச்சர் ஒன்றும் சொல்லவில்லை என ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்து ஆர்.எம்.வீரப்பன் நீக்கியதாக தகவல் கிடைத்தது.
என்னால், ஒருவரது அமைச்சர் பதவி பறிபோய் விட்டதே என எனக்கு வருத்தமாகிவிட்டது. பிறகு அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது இவர் எதுவும் நடக்காதது போல என்னிடம் பேசினார். அதனை விடுங்க, நீங்க எந்த பட ஷூட்டிங்கில் இருக்கிறீர்கள் என பேசினார். பிறகு, நான் ஜெயலலிதாவிடம் பேசட்டும் என கேட்டேன். வேணாம் பிரச்சனை பெரிதாகும். நீங்கள் சொல்லி பிறகு நான் சேர வேண்டாம் இருக்கட்டும் என கூறிவிட்டார்.
அந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவை எதிர்க்க சில காரணங்கள் இருந்தாலும், அதில் இதுவும் ஒரு முக்கிய காரணம். ” என அந்த டாக்குமென்டரி வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 30 வருட அரசியல் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார் என்றே பலரும் கூறி வருகின்றனர்.