ரஜினி – சீமான் சந்திப்பு: விஜய்க்கு எதிரான நடவடிக்கை? பின்னணி என்ன?
ஒரு காலகட்டத்தில் ரஜினியை கடுமையமாக விமர்சித்த சீமான், இப்பொது ரஜினியை நேரில் சந்தித்துள்ளார்.
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், விஜய்யின் அரசியல் வருகை சீமானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் ரஜினியை சந்தித்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமான ரஜினிகாந்தை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதாவது, ‘தமிழ்நாட்டை ஒரு தமிழனை ஆள வேண்டும்’ என கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினரும், ரஜினி ரசிகர்களும் மாற்றி மாற்றி விமர்சித்துக் கொண்டனர். இப்படியான சூழ்நிலையில், இந்த இருவரின் சந்திப்பு அனைவரது கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அதற்கு காரணம் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் தான். ‘தனது கவர்ந்திழுக்கும் நடிப்பாற்றல் மூலம் ஆரம்பகால ரஜினியாக நம் மனதை ஆட்கொள்கிறார்’என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை கண்ட ரஜினி, சீமானை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துடன் நேரில் பேசவும் விரும்பியுள்ளார்.
அதே போல், சீமானின் பிறந்த நாளை ஒட்டி அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க ரஜினி ஆசைப்பட்டாராம். ஆனால், கூலி படப்பிடிப்பில் ரஜினியும், கட்சி வேலைகளை சீமானும் பிசியாக இருந்தால் அந்த சந்திப்பு நடைபெறாமல் போனது.
இந்த சூழலில், ரஜினியை அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்திருக்கிறார் சீமான். நேற்று இரவு 8 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. அப்போது ரஜினியும் சீமானும் மனம் விட்டு பல விஷயங்களை பேசிக் கொண்டதாகவும், இருவரும் உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, விஜய் மாநாடு உள்ளிட்ட பல அரசியல் நிகழ்வுகள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.