ரஜினி அவரிடம் கேட்டு பேசியிருக்கலாம் – தினகரன்
- நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது.
- பெரியார் குறித்து நடிகர் ரஜினி பேசியது கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை அணியப்பட்டது என்று ரஜினி பேசினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ரஜினியின் இந்த பேச்சிற்கு எதிராக தமிழகத்தில் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விவகாரத்தில் தான் வருத்தமோ ,மன்னிப்போ கேட்க முடியாது என்று ரஜினி திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினி கருத்து குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், பெரியார் குறித்து நடிகர் ரஜினி பேசியது கண்டனத்திற்குரியது.பெரியார் குறித்து தமிழருவி மணியன் உள்ளிட்டோரிடம் விவரம் கேட்டறிந்து ரஜினி பேசியிருக்க வேண்டும்.தமிழர் நலனுக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த பெரியார் குறித்து பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய தலைவர்கள் பற்றி பேசுவதற்கு முன்பு யோசித்து உண்மை தன்மை அறிந்து பேசியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.