திடீர் திருப்பம்… திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார் ராஜேந்திர பாலாஜி!
மதுரை சிறைக்கு பதில் திருச்சி சிறைக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அழைத்து செல்லப்படுகிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை சிறைக்கு பதில் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார். பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களால் திருச்சி சிறைக்கு ராஜேந்திர பாலாஜி மாற்றப்படுகிறார். இதனிடையே, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதன்பின்னர், பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரியை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார். 20 நாட்களாக 8 தனிப்படை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் ,நேற்று மதியம் கர்நாடகாவில் ஹாசனின் ராஜேந்திர பாலாஜியை சுற்றி வளைத்து காவல்துறை கைது செய்தது.
கைது செய்யப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜியை தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், அவர் நள்ளிரவில் விருதுநகர் அழைத்து வரப்பட்டு, 3 மணி நேரத்திற்கும் மேலாக ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து,ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பரம்பீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் அவரை மத்திய சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடு காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக மதுரை சிறைக்கு பதில் திருச்சி சிறைக்கு ராஜேந்திர பாலாஜி அழைத்து செல்லப்படுகிறார்.