கோழி முதலில் வந்ததா.? முட்டை முதலில் வந்ததா.? ராஜராஜசோழன் குறித்த சர்ச்சைக்கு சரத்குமார் அறிக்கை.!

Default Image

கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்பது போல் தற்போது ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்? மாமன்னன், வீரத்தமிழன் ராஜராஜ சோழன் புகழ் உலகிற்கு எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

அண்மையில் ஒரு விழாவில் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில் , ‘ ராஜராஜ சோழனை இந்துவாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.’ என பதிவிட்டார். இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ராஜ ராஜசோழன் குறித்த சர்ச்சைக்கு திரைப்பட நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடுகையில், ‘ மாமன்னன் ராஜராஜசோழன், இந்துவா? சைவமா? வைணவமா? என்ற கேள்வி தற்போது சென்று கொண்டிருக்கிறது. இது எட்டாம் நூற்றாண்டில், சைவம், வைணவம், சாந்தம் என்ன பல்வேறு பிரிவுகளாக இருந்த பிரிவுகளை அரசியலமைப்புச் சட்டத்தின் படி இந்து சமயம் என வரையறுத்தனர்.

1790 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டத்தை வகுத்த போது, சிந்து நதியிலிருந்து மறுவிய இந்து என்று அவர்கள் இந்து மதத்திற்கு பெயரிட்டனர். குரங்கிலிருந்து மனிதன் வந்தார் என்பதால் தற்போது குரங்கை மனிதன் என்றும், மனிதனை குரங்கு என்றும் சொல்லலாமா? இந்த சர்ச்சைகள் தற்போது தேவைதானா?

கிறிஸ்தவம் எப்போது உருவானது? இஸ்லாமியர்கள் எப்போது உருவானார்கள்? தேசம் முதலில் வந்ததா? மக்கள் முதலில் வந்தனரா? சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றி விட்டோம். தற்போது தமிழ்நாடு இல்லை என்பது எந்த விதத்தில் நியாயம்? கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்பது போல் தற்போது ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்?

சைவ சமயம் இருந்தது உண்மை. வைணவ சமயம் இருந்ததும் உண்மை. அந்த சமயங்களை ஒன்றாக இணைத்து இந்து சமயம் என்று ஆனதும் உண்மை. இதற்கு மேல் ஆராய்ச்சி செய்து என்ன செய்யப் போகிறீர்கள்? இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில் தொடரும் சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது.

மக்கள் நலனுக்கான சிந்தனைகளில் நேரத்தை செலவிடாமல், பின்னோக்கி சென்று வரலாற்றில் சாதித்த மன்னர்களின் புகழை ஆராயாமல், சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா பொய்யா என பேசி சர்ச்சைக்குரிய ஒன்றாக உருவாக்குவது நியாயமா.?

உலகம் அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளால் புதிய அறிவியல் வளர்ச்சியால் வளர்ந்து வருகிறது. நாளைய மனிதன் விண்வெளிக்கு செல்ல பாதை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் ராஜராஜ சோழன் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று விவாதிக்காமல் உலக அதிசயங்கள் ஒன்றாக வைத்து போற்றக்கூடிய தஞ்சை பெரிய கோயிலை அர்ப்பணித்த மாமன்னன், வீரத்தமிழன் ராஜராஜ சோழன் புகழ் உலகிற்கு எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும்.’ என அந்த அறிக்கையில் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்