ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு… தமிழக அரசு..!
ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு பொதுப் பிரிவினர் 53 வயது வரையும், இதர பிரிவினர் 58 வயது வரை சேரலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் சென்னையில் சம வேலை சம ஊதியம் , சம்பள உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடைநிலை பதிவு மூப்பு ஆசியரியர்கள் சங்கம் சார்பில் இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களின் போராட்டத்திற்குப் பிறகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது உயர்த்தப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினர் 53 வயது வரையும், இதர பிரிவினர் 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 50 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.