தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுவை ஆகிய இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். மழை ஒருபக்கம் இருந்தாலும், வெயிலும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் வெப்ப நிலை சற்றே அதிகரித்து காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்திருக்கிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.