தமிழகத்தில் மழை: விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.!
கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு தீடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தர்மபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் சாய்ந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளானார்கள்.அதுபோல் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்துள்ளது.
ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால், வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரண்டு மணிநேரமாக பெய்த மழையால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், எரியோடு, கோவிலூர் குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது.
வேலூர் மாவட்டம் இப்போது மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
அதுபோல் சேலம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.இந்நிலையில், வட தமிழகத்தின் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நீலகிரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Rain in Tamil Nadu: Farmers and civilians are happy!