#BREAKING: கான்கிரீட் வீடு இடிந்திருந்தால் ரூ.95,000, குடிசை இடிந்திருந்தால் ரூ.5,000 – அமைச்சர் அறிவிப்பு
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என அமைச்சர் விளக்கம்.
சென்னை எழிலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், வடகிழக்கு பருவமழையால் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தார். அமைச்சர் கூறுகையில், வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800 நிவாரணம் வழங்கப்படும்.
மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும். மழையால் குடிசை பகுதி அளவு இடிந்திருந்தால் ரூ.4,100 வழங்கப்படும். மழையால் கான்கிரீட் வீடு இடிந்திருந்தால் ரூ.95,000 வழங்கப்படும். பசு, எருமைகள் உயிரிழந்தால் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க ஏற்கனவே அரசு விதியில் உள்ளது என தெரிவித்தார்.
கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை பாதிப்புகளால் கடந்த ஒரு வாரத்தில் 2 பேர் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை மழையால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 99 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
52,000 பேருக்கு முகாம்கள் மூலம் உணவு வழங்கபடுகிறது. கடலூர், மயிலாடுதுறையில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். எனவே, முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்த பிறகு நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.