ராகுல் காந்தி பதவி நீக்கம்! மோடி அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் செயல்! – கே.பாலகிருஷ்ணன்

Default Image

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம்! மோடி அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் செயல் என கே.பாலகிருஷ்ணன் கண்டனம் 

2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என  மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது.

2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.  இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கே.பாலகிருஷ்ணன் கண்டனம் 

அந்த வகையில் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம்! மோடி அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் செயல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்! குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, 30 நாட்கள் ஜாமின் வழங்கி தண்டணையை தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், மோடி அரசு அவரது மக்களவை உறுப்பினர் பதவியை அவசரஅவசரமாக பறித்துள்ளது என்பது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) குற்றம் சாட்டுகிறது.

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத கொள்கைகளையும், செயல்பாட்டையும் விமர்சிப்பவர்களை மோடி அரசு தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலாக பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.

இத்தகைய செயலுக்கு மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறை போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாகவே மேல்முறையீட்டிற்கு உரிய கால அவகாசம் இருந்தபோதிலும், ராகுல் காந்தியின் பதவியை பறித்துள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்துத் துறைகளிலும் தோல்வி கண்டுள்ள பாஜக அரசு கலக்கமடைந்துள்ளது. இதனை மறைக்க எதிர்க்கட்சியினர் மற்றும் மாற்றுக் கருத்துக்கள் உள்ளவர்கள் மீது பழிவாங்கும் படலத்தை தொடர்ந்து கொண்டுள்ளது.

இத்தகைய ஜனநாயக விரோத, அராஜக, அச்சுறுத்தல் நடவடிக்கைகளை அனுமதிக்க இயலாது. எனவே, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை திரும்ப பெற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. மோடி அரசின் இந்த பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக வலுவாக குரல் எழுப்ப வேண்டுமென அனைத்து ஜனநாயக சக்திகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.’ என  பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்