ராதாபுரம் தேர்தல் வழக்கு..மார்ச் 16-க்கு ஒத்திவைப்பு..!
ராதாபுரம் தேர்தல் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றம் மார்ச் 16-க்கு ஒத்திவைத்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அப்பாவும், அதிமுக வேட்பாளர் இன்பதுரையும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அப்பாவு 49 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார்.
இதனால், அதிமுக வேட்பாளர் இன்பதுரை பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கில் கடைசி மூன்று சுற்று வாக்குககளும், தபால் வாக்குகளிலும் முறைகேடு நடைபெற்றதாக கூறினார்.
மேலும், கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு விடுமாறு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மீண்டும் வாக்கு எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது, வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,ராதாபுரம் தேர்தல் வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை விபரங்களை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணை மார்ச் 16-க்கு ஒத்திவைத்தது.