“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!
சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தி தேசிய மொழி அல்ல. அது ஒரு அலுவல் மொழி என குறிப்பிட்டு பேசினார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று காஞ்சிபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது பேசிய அஷ்வின், முதலில் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். பின்னர் இங்கு எத்தனை பேர் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள் என கேட்டார் . அப்போது குறைவான சத்தம் எழுந்தது. பிறகு, தமிழ் என கூறினார். அப்போது அரங்கத்தில் அதிகமானோர் சத்தம் எழுப்பினர். அதன் பிறகு, இந்தி என கூறினார்.அப்போது யாரும் பெரிதாக சத்தம் எழுப்பவில்லை.
இதனை அடுத்து பேசிய அஸ்வின், “இதை நான் சொல்லணும். இந்தி நமது தேசிய மொழி அல்ல. அதுவும் ஒரு அலுவல் மொழி அவ்வளவு தான்.” என கூறியபோது அரங்கத்தில் இருந்த பெரும்பாலானோர் கரகோஷம் எழுப்பினர். இந்த சத்தத்திற்கு பிறகு தனது பேச்சினை தொடர்ந்தார் அஷ்வின்.
அவர் கூறுகையில், ” நானும் ஒரு இன்ஜினியரிங் மாணவன் தான். எனக்கு 3 விஷயங்கள் என்றால் பயம். ஒன்று, DSP (Digital Signal Processing) எனும் பாடம், LAB , HOD என கூறினார். இந்த மூன்றையும் பார்த்து எட்டு வருஷம் பயந்தேன். 2004இல் இன்ஜினியரிங் முடித்து வெளியே வந்தேன். கல்லூரியில் நான் யாரையும் ரேகிங் பண்ணதில்லை. என்னை தான் ஆசிரியர்கள் பலர் ரேகிங் பண்ணிருக்காங்க. அதெல்லாம் நான் இங்கு கற்றுக்கொண்ட நல்ல பாடங்கள் தான். இந்த இன்ஜினியரிங் தான் என்னை கிரிக்கெட்டில் என்னை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல உதவியது.
நான் சுமாராக படிக்கும் மாணவன். இதில் நான் கற்றுக்கொண்ட பாடம் நேரம் மிச்சப்படுத்துதல் தான். நாம் எழுதுவதை சரியாக பேப்பரில் வெளிப்படுத்த தெரியவேண்டும். “என தான் பொறியியல் பட்டப்படிப்பில் கற்றுக்கொண்ட பாடத்தை தெரிவித்தார்.