16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி வருகிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது உரையை ‘காலை வணக்கம், தமிழ் இனிமையான மொழி, எளிமையான வாழ்க்கை வாழுங்கள்.’ எனக் கூறி தனது உரையை தமிழில் தொடங்கியுள்ளார்.
- அரசின் ஒவ்வொரு செயலும் சமூக நீதி, ஆண்-பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாக கொண்டிருக்கும்.
- மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது.
- தமிழை இந்திய அலுவல் மொழியாக ஆக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும்.
- அனைத்து மக்களுக்கான அரசாக திமுக அரசு செயல்படும்.
- ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாவின் பொன்மொழிக்கு ஏற்ப திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
- இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும், திருத்தங்களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
- முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.335 கோடி கிடைத்துள்ளது.
- மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.
- விவசாயிகள் நலன் காக்க, ஆண்டுதோறும் வேளாண்மைக்கு தனி நிதிநிலை தாக்கல் செய்யப்படும்.
- நிதிநிலை குறித்து ஜூலை மாதத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
- தமிழகத்துக்கு தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்க, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
- நீட் தேர்வில் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க தேவையான சட்டங்களை நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- நிலத்தடிநீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம்.
- கச்சத்தீவை மீட்பது, மீனவர் நலன் பாதுகாப்பு போன்றவற்றுக்கு தீர்வு காண ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
- தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.
- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க தொழிலதிபர்கள், நிதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
- கோயில் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துக்களின் தணிக்கை செயல்முறைகளை நெறிப்படுத்தப்படும்.
- மதுரவாயல் துறைமுகம் வரையிலான உயர்மட்ட சாலை திட்ட பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழ்நாட்டின் சுற்றுலா திறனை முழுமையாக வெளிக் கொண்டுவர நடப்பாண்டில் திட்டம் வெளியிடப்படும்.
- 2020-ம் ஆண்டு ஒன்றிய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்படும்.
- வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
- தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
- குடும்ப அட்டை விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்.
- கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்ய மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும்.
- பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதியுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும்.
- மதுரை, திருச்சி, சேலம், நெல்லையில் பெருந்திரள் விரைவு போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- பொது விநியோக திட்டத்துக்கு பருப்பு, பாமாயில், சர்க்கரை கொள்முதல் செய்யும் நடைமுறை சீராக்கப்பட்டதால் அரசுக்கு நிதி.
- பொருளாதார மந்த நிலையை போக்கும் வகையில் அரசுக்கு ஆலோசனை வழங்க முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
- சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.
- முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்தவும், தேவையான அனுமதியை விரைந்துவளங்குமாறும் கேரள அரசு, ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்.
- சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் புதுப்பிக்கப்பட்டு புத்துயிரூட்டப்படும்.
- அரசுப்பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத காலி பணியிடங்கள் சிறப்பு நியமனம் மூலம் நிரப்பப்படும்.
- கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகதாது திட்டத்தை நிராகரிக்குமாறு ஒன்றிய அரசு திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.
- காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு உறுதி.
- இளைஞர்களை பயன்படுத்தி தமிழ்நாட்டிலுள்ள நீர்வளம் மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
- 2021-22, 125 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் மூலம் இதுவரை 63,500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.