மதுரையில் நடந்தது புளியோதரை மாநாடு! ரஜினி உ.பி முதல்வர் காலில் விழுந்தது மனதுக்கு வருத்தம் – ஈ.வி.கே.எஸ்
ஆளுநரின் செயல்கள் ஜனநாயக அரசுக்கு எதிராக உள்ளது என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு தேவையில்லாத இடையூறுகள் செய்து வருகிறார். அவரது செயல் ஜனநாயக அரசுக்கு எதிராக உள்ளது. TNPSC தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்வதற்கு ஆளுநர் தடையாக இருக்கிறார், ஆளுநர் மீது தமிழக மக்களுக்கு கோபம் இருக்கிறது.
மதுரை மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளது, அந்த மாநாட்டை ஒரு புளியோதரை மாநாடாக தான் பார்க்கிறேன் என விமர்சித்தார். இதுபோன்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒன்றும் பாதயாத்திரை போகவில்லை, வாகன யாத்திரை தான் சென்றிருக்கிறார் எனவும் விமர்சித்துள்ளார்.
சுங்கச்சாவடிகளில் பணம் வசூலிப்பதில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதேபோல் இறந்தவர்களின் பெயரை பயன்படுத்தி காப்பீடு என்ற பெயரில் பணத்தை எடுத்து இருக்கிறார்கள் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது ஏற்கனவே 7 கிரிமினல் வழக்குகள் உள்ள நிலையில், அவர் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். காவேரி நதிநீர் பிரச்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவார் எனவும் எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.