குளத்தை காணவில்லை – புதுக்கோட்டை இளைஞர்கள் போலீசில் புகார்!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் உள்ள குளத்தை காணவில்லை என அப்பகுதி இளைஞர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
வடிவேலு ஒரு படத்தில் கடன் வாங்கி வெட்டிய கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, அந்த இடத்திற்கு காவலர்களை அழைத்து சென்று காண்பித்து இருப்பார். இந்த காட்சி போலவே அண்மை காலங்களாக பல இடங்களில் தங்கள் பகுதியில் இருந்த நீர்நிலைகள் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல தற்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் உள்ள கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம் ஆகிய மூன்று கிராமங்களை உள்ளடக்கிய 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஊரணி எனும் ஏரிக்கு அருகில் அம்புலி ஆற்றில் காமராஜர் கட்டிய அணையிலிருந்து தண்ணீர் வர வழிகள் இருந்துள்ளது.
ஆனால், தற்பொழுது அப்பகுதியில் இருந்த நீர் வழித்தடங்கள் காணாமல் போனதோடு ஆக்கிரமிப்பு காரணமாக நீர்நிலைகளும் சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வடக்கு பக்கத்திற்கான பாசனத்திற்கு 1808 இல் குமிழி அமைக்கப்பட்டிருந்த நிலையில் 21 கிராமங்களுக்கு நிலத்தடி நீர் குறையாமல் இருக்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த குளத்தை தற்பொழுது காணவில்லை எனவும், அதனை கண்டுபிடித்து தாருங்கள் எனவும் பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினரிடம் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
இருப்பினும் பலன் கிடைக்காததால் கீரமங்கலம் காவல் நிலையத்தில் நீரின்றி அமையாது உலகு அமைப்பின் இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து காணாமல் போன குளத்தை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளனர். மேலும், உங்கள் தொகுதியின் முதல்வர் திட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுவுக்கும் அம்புலி ஆற்றிலிருந்து தண்ணீர் வரும் கால்வாய் தடுப்பு சுவர் அமைப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.