650 காளைகளும், 350 காளையர்களும்.. விறுவிறுப்பாக தொடங்கிய புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சியாக நடைபெறும். அந்தவகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் தொடக்கம் முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக, தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது.
அதன்படி, இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆங்காங்கே பல பகுதிகளில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றன. இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையில் தச்சங்குறிச்சியில் கடந்த ஜன.6ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதன்பின், கடந்த ஜன்.17-ல் வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதுபோன்று, ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு காளைக்கு உணவாக உயிருடன் சேவல் – போலீசார் வழக்கு பதிவு!
இந்த நிலையில், புதுக்கோட்டை அடுத்த முக்காணிப்பட்டியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஊர் பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டை வருவாய் கோட்டாட்சியர், புதுக்கோட்டை நகர காவல் கண்காணிப்பாளர், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மேலும், இந்த ஜல்லிக்கட்டில் 650 காளைகளும், 350 காளையர்களும் பங்கேற்க உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதி முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மண்டையூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஒன்றரை மணி நேரமாக நிறுத்தப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டி, தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.