கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் – முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்தை பேரை தாண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா பாதிப்பால் இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறையும் என்று எண்ணிய நிலையில், தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக உள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக மே 3 வரை ஊரடங்கில் எந்த தளர்வும் இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு குறைவாக இருந்தாலும் அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சலுகைகள் அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்து வருகிறார். ஏற்கனவே பொருளாதார இழப்பை சமாளிக்க ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இதையடுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மேலும் ரூ.2,000 வழங்குவதற்கு ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.