பள்ளிகளுக்கு பறந்த கிடுக்குப்பிடி உத்தரவு.! தலைமை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாடமெடுக்க வேண்டும்.!
பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் நிலை 1 , நிலை 2, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் நிர்வாக நேரம் போக மீதி நேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகள் எடுக்க வேண்டும் என புதுசேரி பள்ளி கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்வேறு பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் ஆசிரியர்களாக இருந்து இந்த தலைமை பொறுப்புக்கு வந்தாலும், அவர்கள் நிர்வாக பணிகள் அதிகம் இருப்பதை சுட்டிக்காட்டி மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை தவிர்த்து வருவதாக புதுசேரி பள்ளி கல்வி துறைக்கு புகார்கள் எழுந்து வந்தது.
இது தொடர்பாக ஏற்கனவே ஓர் உத்தரவு இருந்தும். அதனை யாரும் பின்பற்றப்பட வில்லை எனவும் குற்றசாட்டுகள் எழுந்தது. இதனை குறிப்பிட்டு தற்போது புதுசேரி பள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு அதிரடி உத்தரவை புதுசேரி பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் 712 பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார்.
அதாவது, பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் நிலை 1, நிலை 2, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிர்வாக நேரம் போக மாணவர்களுக்கு கண்டிப்பாக பாடம் எடுக்க வேண்டும். என உத்தரவிட்டு, அதற்கான நெறிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளது.
அதில், பள்ளி முதல்வர்கள் வாரத்திற்கு ஆறு வகுப்புகள் எடுக்க வேண்டும். துணை முதல்வர்கள் வாரத்திற்கு 12 வகுப்புகளும் நடத்த வேண்டும். கிரேடு-1 தலைமையாசிரியர்கள் வாரத்திற்கு 6 வகுப்புகள் நடந்த வேண்டும்.
கிரேடு-2 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர்கள் வாரத்திற்கு 10 வகுப்புகளை மாணவர்களுக்கு கட்டாயம் பாடம் எடுக்க வேண்டும்.’ என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதனை பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க கண்காணிப்பு குழு ஒன்று திடீரென விசிட் அடிக்கும் என கூறப்படுகிறது.