புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா இல்லை – முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது என்று முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் எம்எல்ஏ பதவியை தொடர்ந்து ராஜினாமா செய்தனர். சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி பலம் 19 ஆக இருந்த நிலையில், பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால், காங்கிரஸ் கூட்டணி பலம் 18 ஆக குறைந்தது.
தற்போது, 4 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 14-ஆக குறைந்ததால், நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. மத்திய அரசின் கெடுபிடியால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது என்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அரசியல் சாசன சட்டப்படி புதுச்சேரி அரசு செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.