புதுச்சேரியில் மதுக்கடைக்குள் புகுந்து மது வகைகளை கடித்து குதறிய எலிகள்… புலம்பும் புதுவை அதிகாரிகள்…
கொரோனா ஊரடங்கால் புதுச்சேரியில் சீல் வைக்கப்படிருந்த மதுபான கடைக்குள் எலிகள் புகுந்து, அங்கிருந்த ஒயின் பாக்கெட்டுகளை கடித்து குதறி கிழித்து மதுவை ருசிபார்த்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 450 க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. இந்தியா முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த 50 நாட்களுக்கு மேலாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இவ்வாறு பூட்டப்பட்ட கடைகளில் இருந்து மதுபானங்கள் எடுக்கப்பட்டு, திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்ததையடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அறிவுறுத்தலின்பேரில், மாநில கலால்துறையினர் அனைத்து மதுபான கடைகளுக்கும் சீல் வைத்தனர்.
இதில் பல்வேறு கடைகளில் திருட்டு சம்பவம் அரங்கேரியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 8 அரசு அதிகாரிகள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மறைமலையடிகள் சாலையில் உள்ள மதுபானக்கடை ஒன்றிற்கு சென்ற கலால் துறையினர், அங்குள்ள இருப்பு குறித்து கணக்கெடுப்பு செய்துகொண்டிருந்தபோது மதுக்கடையில் இருந்து பயங்கரமான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து கடை முழுவதும் சோதனை செய்த அவர்கள் அங்கு அதிகளவில் மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டு கிடந்தும்,அங்கிருந்த ஒயின் பாக்கெட்டுகள் கிழிந்து கிடந்தன.
எனவே அதிகாரிகள் மதுபானக் கடைக்கு பின்புறம் சென்று பார்த்தபோது, எலிகள் கூட்டம் கூட்டமாக ஒயின் பாக்கெட்டை கிழித்து குடித்துகொண்டிருந்தன. இதனால் அங்கு மதுபானங்களின் இருப்பு குறித்து கணக்கெடுக்க முடியாமல் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். எனவே இப்படி சேதப்படுத்திய எலிகள் மீது எவ்வாறு வழக்குப்பதிவு செய்வது என அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.