புதுச்சேரி முதல்வர் மீது எம்எல்ஏ ஒருவர் ஆளுநரிடம் புகார்.. புகாரளித்தவர் அக்கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்.. நடப்பது என்ன?..குழப்பத்தில் மக்கள்..
- புதுச்சேரியில் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் முதல்வர் மீதே ஊழல் செய்ததாக ஆளுநரிடம் புகார்.
- புதுச்சேரி மட்டுமின்றி இந்தியாவே எதிர்நோக்கும் விவகாரம்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் பாகூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான தனவேலு அங்கு ஆளும் தமது கட்சியான காங்கிரஸ் அரசுக்கு எதிராக தற்போது போர்க்கொடி உயர்த்தி உள்ளார். அந்த குற்றச்சாட்டில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்வதாகவும், மிகவும் மோசமான ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது என்றும் சட்ட மன்ற உறுப்பினர் தனவேலு விமர்சித்திருந்தார். இவர் மேலும் காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மேலிட பார்வையாளர் சஞ்சய் தத்தையும் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.இது மட்டுமல்லாது புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை நேரில் சந்தித்தும் காங்கிரஸ் அரசு மீது ஊழல் புகார் அளித்தார்.
மேலும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், அவரது மகனும் நில ஊழலில் ஈடுபட்டுள்ளதை ஆதாரத்துடன் சி.பி.ஐ.யிடம் கொடுக்க போவதாகவும் அறிவித்தார். மேலும் கூறிய அவர், காங்கிரஸ் கட்சி மிகவும் புனிதமான கட்சி என்றும் கட்சியை விட்டு தான் ஒருபோதும் விலக மாட்டேன் என்றும், வேண்டுமானால் கட்சி தன் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் சட்ட மன்ற உறுப்பினர் தனவேலு கூறி இருந்தார். சட்ட மன்ற உறுப்பினர் தனவேலுவின் புகாரை மற்ற காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்க்கள் ஒன்றிணைந்து எதிர்த்தனர். தனவேலு எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியுடன் இணைந்து ஆட்சியை மாற்றம் செய்ய முயற்சிக்கிறார் என்றும், தனவேலு பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி ஏஜெண்டாக செயல்படுகிறார் என்றும் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து புதுச்சேரி திரும்பிய மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தனவேலு தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் அவரை சஸ்பெண்டு செய்வதாக அறிவித்தார். மேலும் இதுதொடர்பாக தனவேலுவிடமும் விளக்கம் கேட்கப்படும் என்றும் கட்சி விதிமுறைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், ஒழுங்கு நடவடிக்கை குழு அவரின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டும் அதைத்தொடர்ந்து சஸ்பெண்ட் நடவடிக்கையும் புதுச்சேரி மட்டுமின்றி இந்தியாவையே உற்றுநோக்க வைத்துள்ளது.