ஊரடங்கு சட்டத்தை மீறியதாக பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு.!
நாடெங்கிலும் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுசேரியில் ஊரடங்கை மீறினால் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று புதுசேரி பாஜக தலைவரும், நியமன சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன், புதுசேரி, லாஸ்பேட்டை பகுதியில் அரிசி விநியோகம் செய்துள்ளதாக கூறப்பட்டது. இதனால் அங்கு திடீரென மக்கள் கூட்டம் குவிந்துள்ளது.
இதனை அறிந்த காவல்துறையினர், சாமிநாதன், லாஸ்பேட்டையை சேர்ந்த சோமு மற்றும் நெசவாளர் நகரை சேர்ந்த முத்து ஆகியோர் மீது காவல்துறையினர் பேரிடர் மேலாண்மைச் சட்டம், தொற்று நோய் பரவுதல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவின் கீழே வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுசேரியில் இதுவரை ஊரடங்கு சட்டத்தை மீறியதாக கூறி, 381 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 1,237 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.