மீண்டும் குலக்கல்வி.? – கடுமையாக எதிர்க்கும் புதுச்சேரி திமுக.!
புதிய கல்வி கொள்கை மூலம் குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் திணிக்கப் பார்க்கிறார்கள். இந்தியை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கற்றால் மட்டுமே இங்கு வளர்ச்சி என்று பரப்பி திட்டமிட்டே பெற்றோரை குழப்புகிறார்கள். – என புதுச்சேரி திமுக சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.
மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் புதுச்சேரி வந்திருந்தார். அப்போது பேசிய அவர், ‘ புதுச்சேரியில் செயல்படும் அரசுப்பள்ளிகள் அனைத்தும் விரைவில் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற்றப்படும்’ என அறிவித்தார். இது புதுச்சேரி எதிர்கட்சியினர்களிடையே எதிர்ப்பை கிளப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளருமான எம்.எல்.ஏ சிவா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிடுகையில், ‘ புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளை சி.பி.எஸ்.இ பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் வைத்த கோரிக்கைக்கு ஒரேநாளில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய அரசியல் நகர்வை செய்திருக்கிறது பா.ஜ.க. ‘ என்றும்,
‘ புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பாட்டில் உள்ளன. புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை இங்கு தனி கல்வி வாரியம் கிடையாது என்பதால், தமிழக பாடத்திட்டங்களே பின்பற்றப்பட்டு வருகின்றன. அதேபோல ஆந்திர மாநிலத்தின் பாடத்திட்டமும், கேரள மாநிலத்தின் பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியிலுள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று, ஒன்றிய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.’ என்றும்,
அதுமட்டுமல்லாமல், ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் மற்றும் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் கோரிக்கையின் அடிப்படையில்தான் இது நிறைவேற்றப்படவிருக்கிறது என்று கூறியிருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்த முடிவு குறித்து புதுவை கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் விவாதிக்கவில்லை. அது ஏன்? பொதுமக்களை அழைத்து கருத்து கேட்கவில்லை. கடந்த காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி ஆட்சியின்போது தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் புதுச்சேரியில் இவர்களது சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் தேவையற்றது. இதனால் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவார்கள். வடமாநிலத்தவரை பணியில் அமர்த்துவார்கள். ஆசிரியர்களுக்கான `TET’ தேர்வில் தேர்வானது செல்லாது என்பார்கள். CTET மத்திய ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அரசு வேலை என்பார்கள். அதனால் இந்த விவகாரத்தில் புதுச்சேரி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.’ என்றும் தெரிவித்துள்ளனர்.
‘ புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களின் அனுமதி பெற்றுத்தான் இந்த கோரிக்கையும் அறிவிப்பும் வெளிவந்ததா என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். புதிய கல்வி கொள்கை மூலம் குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் திணிக்கப் பார்க்கிறார்கள். இந்தியை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கற்றால் மட்டுமே இங்கு வளர்ச்சி என்று பரப்பி திட்டமிட்டே பெற்றோரை குழப்புகிறார்கள்.
இதனால், இருபது ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ் தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படும். வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகும்.’ என அந்த அறிக்கையில் புதுச்சேரி திமுக சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.