அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
கடந்த மாதம் (செப்டம்பர்) 19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக கட்சி சார்பில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு பேசுகையில் , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை கூறியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து திமுக சார்பில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவின் பேச்சுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், கள்ளக்குறிச்சி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு மீது புகார் அளித்தார். அதன் பெயரில் குமரகுரு மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
திமுகவினர் போராட்டங்கள், காவல்துறை புகார், வழக்குப்பதிவு ஆகியவற்றை தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில், நான் தவறுதலாக அவ்வாறு பேசிவிட்டேன். அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் திமுகவினர் போராட்டங்களை கைவிட்டனர்.
தன் மீதான வழக்குக்கு எதிராக அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, முதல்வர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து பொதுக்கூட்டம் நடத்தி பொதுவெளியில் குமரகுரு மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.