ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு என்பது ஆபத்தானது – இந்திய கம்யூனிஸ்ட்
11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. புதிய கல்வி கொள்கையின் (NEP) அடிப்படையில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கிறது மத்திய அரசின் கல்வி அமைச்சகம். இரண்டு முறை நடத்தப்படும் பொதுத்தேர்வில் இதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிகள் படிக்க வேண்டும் என்றும் அதில் ஒன்று இந்தி மொழியாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு என்பது ஆபத்தானது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே நீட் தேர்வு காரணமாக ஆயிரக்கணக்கில் பயிற்சி மையங்கள் உருவாகி பணம் பறிக்கும் கும்பல் வளர்ந்து வருகிறது.
அடித்தட்டு மக்களின் குழந்தைகள், தேர்வு முறையால் அச்சப்பட்டு பதற்றமடைந்த தற்கொலை செய்கின்றனர். பள்ளி கல்வியில் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வு என்ற மத்திய அரசின் அறிவிப்பு கல்வி தாக்குதலாகும். இந்தியை எதிர்ப்பின்றி ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அகங்காரத்துடன் பேச்சுக்கு செயல் வடிவம் தரும் முயற்சி இது. அரசின் வஞ்சக திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.