பொதுமக்கள் ஏமாற்றம் : தடுப்பூசி தட்டுப்பாட்டால் மூடப்பட்ட மையங்கள்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி மையங்கள் பல மூடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
ஒரு வருடத்திற்கும் மேலாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனாவுக்கு எதிராக பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, தற்பொழுது பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போடுவது ஒன்றே வழி என விழிப்புணர்வு அடைந்துள்ளதால் பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
எனவே தடுப்பூசி போட செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பக்கூடிய நிலை உருவாகிறது. குறிப்பாக சென்னையில் 45 கொரோனா தடுப்பூசி மையங்களும், 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களும் தடுப்பூசி செலுத்தும் மையங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்த தடுப்பூசி மையங்கள் அனைத்தும் செயல்படாத நிலையில் உள்ளது. எனவே மக்கள் இந்த தகவல் தெரியாமல் தடுப்பூசி மையங்களுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்ப கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மதுரை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் தடுப்பூசி மையங்கள் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அடைக்கப்பட்ட வண்ணமே உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், ஜூலை மாதத்திற்கு மத்திய அரசிடமிருந்து 71 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில், முதல் கட்டமாக 10 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது, அவைகளும் தீர்ந்து வரும் நிலையில், அடுத்ததாக 11ஆம் தேதி இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தடுப்பூசி போட மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருவதால் விரைவில் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து தடுப்பூசி தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.