என்னை பேச விட்டு இருந்தால் கிழி கிழியென கிழித்திருப்பேன்… இபிஎஸ் ஆவேசம்.!

ADMK Chief Secretary Edappadi Palanisamy

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால்  அதிமுக எம்எல்ஏக்களை இந்த நடப்பு கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். கேள்வி நேரம் முடிந்து விவாதம் நடத்தலாம் என கூறியும் அதிமுக மறுத்து அமளியில் ஈடுப்பட்டதாக சபாநாயகர் தரப்பில் கூறபடுகிறது.

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி வழங்கப்படாததை கண்டித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காலை 9 மணிமுதல் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்த உண்ணாவிரத நிகழ்வில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளும் திமுக கட்சி பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அதில், எதிர்கட்சிகளை சட்டமன்றத்தில் பேசவிட்டு, அவர்கள் என்னென்ன பிரச்சனைகள் கூறுகிறார்கள் என கேட்டு அதனை சரிசெய்வது தான் ஓர் நல்ல அரசாங்கம்.

பேரவையில் என்னை பேச விட்டு இருந்தால், அதன் நேரலையை நிறுத்தாமல் இருந்திருந்தால், நான் ஆளும் கட்சியை கிழி கிழி கிழியென கிழித்திருப்பேன். மெத்தனால் குடித்தவர்களுக்கு சிகிச்சைக்காக உடனடியாக வழங்கப்படும் மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பு இல்லை. நான் பேட்டி அளித்த பிறகே மும்பையில் இருந்து அவசர அவசரமாக வந்துளளது.

ஆட்சி சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். 40க்கு 40 என ஆட்சியில் இருக்கும் மமதையில், ஆணவத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கேள்விக்கே பயந்தே முதலமைச்சர் இன்னும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை.

ஆட்சி அதிகாரம் அவர்கள் வசம் உள்ளது. மாநில அதிகாரத்தில் செயல்படும் சிபிசிஐடி விசாரித்தால் நீதி கிடைகாது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் எங்களுக்கு பேச அனுமதி கொடுக்கவில்லை. அதனால் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறோம்.

ஆனால் இதற்கு கூட 29 நிபந்தனைகள் விதித்து இரவு 9 மணிக்கு தான் அனுமதி தருகிறார்கள். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் அரசு பொறுப்பேற்க வேண்டும். சிபிஐ விசாரணை வேண்டும். முதல்வர் பதவி வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரத போராட்டத்தில் பேசினார்.

இதனை அடுத்து ஏற்கனவே அறிவித்தது போல மாலை 5 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஜூஸ் அருந்தி உண்ணாவிரத்தை நிறைவு செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்