டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்புப் போராட்டம்! மக்கள் மீது பதியப்பட்ட வழக்கு வாபஸ்!
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு வாபஸ் வாங்கியது.
சென்னை : மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை ஒன்றிய அரசு வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அதிலிருந்து, இந்த திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் இருந்து அதிகமான எதிர்ப்புகள் கிளம்பியது.
குறிப்பாக, இந்த திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று முதல்வர் முகஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதைப்போல, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 09.12.2024 அன்று ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மக்களின் உணர்வுக்கும் தமிழ்நாடு அரசின் உறுதிக்கும் கிடைத்த வெற்றியாக மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிடுவதாகவும் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது செய்ப்பட்ட வழக்குப்பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், ” இந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.
இதன்படி, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சந்கீதா சட்டம் 2023 ன் கீழ் 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளன” என அறிக்கையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் – செய்தி வெளியீடு#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/J0SONpoIup
— TN DIPR (@TNDIPRNEWS) January 26, 2025