மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு.! தண்ணீர் தொட்டி மீது ஏறிய பொதுமக்கள்.!
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க பணிக்காக சுமார் 637 ஏக்கர் பரப்பளவில் அருகாமையில் உள்ள சின்ன உடைப்பு பகுதி கிராம நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
உரிய இழப்பீடு அளிக்காமல் நிலம் கையகப்படுத்துவதாக கூறி இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களுடன் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சின்ன உடைப்பு கிராம பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு ஈடாக மதுரை மாநகராட்சி பகுதியில் நிலம், வீடு கட்டி தரவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை முன்னிறுத்தி இன்றும் போராட்டத்தை அப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.
கிராமத்து இளைஞர்கள் சின்ன உடைப்பு பகுதி நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்து வருவதால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் வரவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.