கப்பலூர் சுங்கச்சாவடி போராட்டம்.! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமர் கைது.!
மதுரை: மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் கடந்த 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நடைமுறையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக நேற்று தமிழக அரசும் ஓர் செய்தி குறிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், கப்பலூர் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் முன்வைத்த கோரிக்கை குறித்து தமிழக அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டது.
இருந்தும், கப்பலூர் சுங்கச்சாவடியில் தொடர்ந்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதே போல, கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்போவதாக போராட்ட குழுவினர் சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது
இதனால், அங்கு இன்று காலை முதலே ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் வந்திருந்தனர். அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருந்தும் ஆர்.பி.உதயகுமர் மற்றும் அதிமுகவினர் கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.