இவர்களுக்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி பதவி உயர்வு வழங்கி பட்டியலை வெளியிடுங்க – அன்புமணி ராமதாஸ்
வணிக வரித் துறை பணியாளர்களுக்கு 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நீதியை வழங்க வேண்டிய கடமையும் தமிழக முதலமைச்சர் உண்டு.
வணிகவரித்துறை பணியாளர்களுக்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி பதவி உயர்வு வழங்கி உடனே பட்டியல் வெளியிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக அரசின் வணிகவரித்துறை பணியாளர்களுக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும். அதனடிப்படையில் 1981-ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.
தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முக்கியமான துறை வணிக வரித் துறை ஆகும். அத்துறையின் பணியாளர்களுக்கு உரிய பதவி உயர்வும், சமூக நீதியும் வழங்கப்படாததால், அத்துறையில் பணிச்சுமை அதிகரித்து, பணிகள் முடங்குவது வணிகவரி வசூல் உள்ளிட்ட பல விஷயங்களை பாதிக்கும். அதுமட்டுமின்றி, 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்குப் பிறகும் வழங்க மறுப்பது நியாயமற்றது. தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்ற பொன்மொழிக்கு இது உதாரணம் ஆகிவிடக்கூடாது.
வணிக வரித் துறை பணியாளர்களுக்கு 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நீதியை வழங்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. அதை நிறைவேற்றும் வகையில் 1981 முதல் 2020 வரையிலான வணிக வரித் துறை பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். அதனடிப்படையில் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வணிக வரித் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.