“பாட்டாளி சொந்தங்களே…நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்;வெற்றிகளை குவித்தாக வேண்டும்” – ராமதாஸ் அறிவுறுத்தல்!

Default Image

விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 12,820 இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்றும், வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் தனது கட்சியினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சிகளில் நல்லாட்சியை பாமகவால் தான் வழங்க முடியும்.நகர்ப்புற உள்ளாட்சிகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக  தமிழகத்தை தற்போது ஆட்சி செய்யும் திமுக அரசின் தவறுகள்,தோல்விகள், முந்தைய அதிமுக அரசின் மீதான விமர்சனங்கள்,எதிர்க்கட்சியாக மக்கள் பணியாற்றத் தவறியது ஆகியவற்றை மக்கள் மன்றத்தில் முன்வைத்து பரப்புரை செய்ய வேண்டும் எனவும்,மக்களின் வளர்ச்சிக்கான நமது செயல்திட்டங்களை விளக்கிக் கூறினாலே அவர்களின் வாக்குகளை பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும்.2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் நமது ஒற்றை இலக்கு அதிக இடங்களில் வெற்றிகளை குவித்து நகர்ப்புறங்களை நமது வசமாக்க வேண்டும் என்பது தான் என்றும் தனது கட்சியினருக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே,ஓயாமலும்,ஒற்றுமையாகவும் உழைப்பதில் நீங்கள் எறும்புகளுக்கும், தேனீக்களுக்கும் இணையானவர்கள். உங்கள் திறமையும்,உழைப்பும் கடந்த காலங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன.பாட்டாளிகளாகிய நமது திறமையையும்,அர்ப்பணிப்பையும் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஐயமின்றி நிரூபிப்பதற்கான வாய்ப்பு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்ற வடிவத்தில் மீண்டும் ஒருமுறை கிடைக்கப்போகிறது.

தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் சுமார் ஐந்தரை ஆண்டுகள் தாமதமாக அடுத்த மாதம் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஊரக உள்ளாட்சிகளின் ஒரு பகுதிக்கு மூன்று ஆண்டுகளும்,மற்ற பகுதிகளுக்கு ஐந்து ஆண்டுகளும் தாமதமாக தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையில்,உச்சநீதிமன்றத்தின் கெடுபிடி காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு அரசு ஆளாகியிருக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும்,மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நாளுக்கும்,வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் நாளுக்கும் இடையில் குறைந்தது ஒரு வாரம் அவகாசம் இருக்கும்.அண்மையில் அறிவிக்கப்பட்ட உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளுக்கும்,வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்பட்ட நாளுக்கும் இடையில் கூட 7 நாட்கள் இடைவெளி இருந்தது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கவும்,அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் இணைக்க வேண்டிய ஆவணங்களை தயாரிக்கவும் தேவையான அவகாசம் அளிக்க வேண்டும் என்பது தான் இடைவெளி அளிக்கப்படுவதன் நோக்கம்.

ஆனால்,தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் போது இத்தகைய அவகாசத்தை எதிர்பார்க்க முடியாது.தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்தாலும்,அதிமுக ஆட்சி நடந்தாலும் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நேரத்திற்கும்,வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் நேரத்திற்கும் இடையே அதிகபட்சமாக 36 மணி நேரம் இருந்தாலே அதிசயம்.காரணம்,ஆளுங்கட்சி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு தேர்தலை சந்திக்க முன்கூட்டியே தயாராகி விடும்.

எதிர்க்கட்சிகளுக்கு போதிய நேரம் இருக்காது என்பதால் தேர்தலை எதிர்கொள்ள தடுமாற வேண்டும் என்ற எண்ணம் தான்.இதை எதிர்க்கட்சி விமர்சித்தாலும் கூட, அது மீண்டும் ஆளும்கட்சியாகும் போது இதே அணுகுமுறையைத் தான் கடைபிடிக்கும்.இதே ஆளுங்கட்சி ஆதரவு அணுகுமுறை தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை தொடரும்.அதை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்பதைக் கடந்து,அவற்றையெல்லாம் சமாளித்து தான் வெற்றிகளை குவித்தாக வேண்டும்.

அடுத்த மாதத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான அறிவிப்பு எந்த நேரமும் வெளியிடப்படக்கூடும்.தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து ஒரு நாள் இடைவெளியில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி விடும்.இதை உணர்ந்து கொண்டு தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள்,8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளன.இந்த பதவிகள் அனைத்துக்கும் கட்சி சின்னங்களின் அடிப்படையில் தான் தேர்தல் நடைபெறும்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்ட உடனேயே,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்பமனுக்களை பெறும் பணி தொடங்கி விட்டது.மறு சீரமைப்பு செய்யப்படாத சில மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மட்டும் வார்டு எல்லைகள் அறிவிக்கப்படாததால் அங்கு மட்டும் விருப்பமனு பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதுவரை எங்கெல்லாம் விருப்ப மனுக்கள் பெறப்படவில்லையோ, அங்கெல்லாம் அடுத்த இரு நாட்களில் விருப்ப மனுக்கள் பெறப்பட வேண்டும்.ஏற்கனவே விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் விருப்ப மனு அளித்தவர்களிடம் விருப்பு, வெறுப்பின்றி நேர்காணல் நடத்தி வெற்றி வாய்ப்புள்ளவர்களைக் கொண்ட உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.

அந்தப் பட்டியலில் உள்ளவர்களில் இருந்து வேட்பாளர்களை மேலிடக் குழு தேர்ந்தெடுக்கும்.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 12,820 இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும்; வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்.உள்ளாட்சிகளில் நல்லாட்சியை நம்மால் தான் வழங்க முடியும்.நகர்ப்புற உள்ளாட்சிகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சியிடம் பல சிறப்புத் திட்டங்கள் உள்ளன.அவற்றையும் தமிழகத்தை தற்போது ஆட்சி செய்யும் திமுக அரசின் தவறுகள்,தோல்விகள்,முந்தைய அதிமுக அரசின் மீதான விமர்சனங்கள், எதிர்க்கட்சியாக மக்கள்பணியாற்றத் தவறியது ஆகியவற்றை மக்கள் மன்றத்தில் முன்வைத்து பரப்புரை செய்ய வேண்டும்.மக்களின் வளர்ச்சிக்கான நமது செயல்திட்டங்களை விளக்கிக் கூறினாலே அவர்களின் வாக்குகளை பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த பிறகு நானும்,மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் பா.ம.கவின் மூத்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் பரப்புரை செய்யவிருக்கிறோம்.அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.2022ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் நமது ஒற்றை இலக்கு அதிக இடங்களில் வெற்றிகளை குவித்து நகர்ப்புறங்களை நமது வசமாக்க வேண்டும் என்பது தான்.

இந்த உன்னத இலக்கை எட்டுவதற்கான பணிகளை பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலர்கள் தொடங்கி கடைநிலைத் தொண்டன் வரை அனைத்து நிலை நிர்வாகிகளும் இன்றிலிருந்தே தொடங்க வேண்டும்.உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு பாட்டாளிகள் அனைவரையும் நான் சந்திக்கும் நிகழ்வு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி விழாவாகவே இருக்க வேண்டும்.அதற்காக கடுமையாக உழையுங்கள்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்