காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் 85 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் திட்டம்.! அமைச்சர் சேவூர்.எஸ்.ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.!

Default Image

காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் தமிழகத்தில் 85 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் திட்டப் பணியை அமைச்சர் திரு.சேவூர்.எஸ்.ராமசந்திரன் அவர்கள் திருவண்ணாமலையில் இன்று (மார்ச் 15) தொடங்கி வைத்தார்.

இதற்கான தொடக்க விழா பள்ளிக்கொண்டாப்பட்டு அருகே உள்ள மகாத்மா பசுமை இந்தியா திட்ட நாற்றுப்பண்ணையில் (ஈஷா நர்சரியில்) நடைபெற்றது. விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.சேவூர்.எஸ்.ராமசந்திரன் அவர்கள் பங்கேற்று விதைகளை தூவி மரக்கன்று உற்பத்தியை தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.அருள் செல்வம், வேளாண் துறை முன்னாள் அமைச்சர் திரு.அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் திரு.எம்.பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ரப்யா விருந்தினர்களை வரவேற்று திட்ட விளக்க உரை ஆற்றினார்.

விழாவில் அமைச்சர் திரு.ராமசந்திரன் பேசியதாவது:

காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவேரி கூக்குரல் இயக்கத்தை சத்குரு ஆரம்பித்துள்ளார். மரம்சார்ந்த விவசாயத்தில் தமிழக விவசாயிகளை ஈடுபடுத்தும் பணியை இவ்வியக்கம் செய்து வருகிறது. இந்த விவசாய முறை சுற்றுச்சூழலையும் விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த சிறந்த தீர்வாக உள்ளது.

இதனால், தமிழகம் முழுவதும் மரம்சார்ந்த விவசாயம் தொடர்பாக பல்வேறு விதமான பயிற்சிகளை ஈஷா நடத்தி வருகிறது. காவேரி கூக்குரல் இயக்கம் ஏற்படுத்திய மாபெரும் விழிப்புணர்வால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மரம்சார்ந்த விவசாயம் செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர். அதற்கேற்ப மரக்கன்று உற்பத்தியை இந்தாண்டு அதிகரிக்க ஈஷா முடிவு செய்துள்ளது பாராட்டுக்குரியது.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள 35-க்கும் மேற்பட்ட மகாத்மா பசுமை இந்தியா திட்டத்தின் நாற்றுப்பண்ணைகள் மூலம் 2020-21-ம் நிதியாண்டில் 85 லட்சம் மரக்கன்றுகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்ய உள்ளார்கள். நம் திருவண்ணாமலையில் உள்ள நாற்றுப்பண்ணையில் மட்டும் 10 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளார்கள். அவர்களின் இந்த நல்ல முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என  அமைச்சர் பேசினார்.

விழாவின் ஒரு பகுதியாக, பல்வேறு வகையான மரங்கள் மற்றும் பாரம்பரிய மூலிகை செடிகளின் கண்காட்சி நடைபெற்றது. அதை சிறப்பு விருந்தினர்களும் மாணவர்களும் பார்வையிட்டனர். பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியின் மூலிகை விஞ்ஞானி திரு.பாண்டி குமார் அவர்கள் மூலிகைகளின் மருத்துவ பயன்கள் குறித்து பேசினார். இவ்விழாவில் சுற்றுவட்டார விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்கேற்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்