பற்களை பிடுங்கிய விவகாரத்தில் தொடரும் நடவடிக்கை…! : மேலும் 6 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!
கைதி பற்களை பிடுங்கிய விவகாரத்தில், மேலும் 6 காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு ரத்தம் வரும் வரை காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டங்களை தெரிவித்துள்ள நிலையில், சட்டபேரவையில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், அவரின் பணியிட மாற்றம் குறித்தும் பணியிட நீக்கம் குறித்தும் பேசியிருந்தார்.
இந்த நிலையில், மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைகுறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், நெல்லை மாவட்ட எஸ்.பி யாக இருந்த சரவணனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் பெருமாள், திருநெல்வேலி தனிப்படை உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன் மற்றும் இரண்டு தனிப்படை காவலர்களும் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.