“பிரச்சனைகளை வருமுன் தடுத்திட வேண்டும்” – முதல்வருக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்!

Default Image

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலும்,தங்கும் விடுதிகளிலும் சுகாதாரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல்துறை நடவடிக்கை ஏதுமின்றி விரைவில் திமுக அரசு விடுவிக்க வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வெளியான செய்தியை அடுத்து,உயிரிழந்ததாகக் கூறப்படும் 8 தொழிலாளர்களின் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பணிக்காக வந்தவர்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து நேற்று முன்தினம் இரவு முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Female worker

சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில்,போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,உண்மை நிலையை விளக்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.மேலும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோரின் பேச்சுவார்த்தையின் பேரிலும் தனியார் ஆலை முன் 18 மணி நேரமாக தொடர்ந்த பெண் தொழிலார்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன்படி,தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

எனினும்,அனுமதியின்றி போராட்டம் நடத்தியது,பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே போராட்டம் நடத்தியதில் ஒரு பகுதியினர் கைது செய்யப்பட்ட நிலையில்,தற்போது 22 பெண் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தமிழகமெங்கும் இயங்கி வரும்,தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் தனியார் விடுதிகளில் தங்கும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு, உணவின் தரம் போன்ற அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய, அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றினை அமைத்து,அக்குழுவின் மூலமாக அவ்வப்போது நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு இதுபோன்ற பிரச்சனைகளை வருமுன் தடுத்திட வேண்டும் என்று முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம், ஃபாக்ஸ்கான் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களின் நியாயமான கோரிக்கையான மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில், திரும்பிவராத 8 பெண் தொழிலாளர்களின் நிலை என்ன என்பதையும்,

தொழிற்சாலையிலும்,தங்கும் விடுதிகளிலும் சுகாதாரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல்துறை நடவடிக்கை ஏதுமின்றி விரைவில் விடுவிக்குமாறு இந்த அரசை வற்புறுத்துகிறேன்.

eps

மேலும், இதுபோன்று தமிழகமெங்கும் இயங்கி வரும்,தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் தனியார் விடுதிகளில் தங்கும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு, உணவின் தரம் போன்ற அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய, அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றினை அமைத்து,அக்குழு அவ்வப்போது நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு இதுபோன்ற பிரச்சனைகளை வருமுன் தடுத்திட வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்