தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கக் கூடாது -அமைச்சர் அன்பில் மகேஷ்!
பெற்றோர்களை கட்டாயப்படுத்தி தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிளஸ் டூ பொதுத் தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பிளஸ்டூ பொதுத் தேர்வு தொடர்பாக மத்திய அரசின் கருத்துக்கள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸால் உயிரிழந்த ஆசிரியர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெற்றோரை கட்டாயப்படுத்தி தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பெற்றோர்களை கட்டாயப்படுத்தாமல் அரசு அனுமதித்துள்ள கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் என தெரிவித்துள்ள அவர், கொரோனா பாதிப்பு குறைந்த பின்பு தான் மாணவர் சேர்க்கை குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.