தனியார் பள்ளிகள் கட்டணம்: தீர்ப்பு இன்று வெளியாகிறது..!
தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் தனியார் பள்ளிகள் 75% கல்விக்கட்டணத்தை 2 தவணையாக அதாவது 40% மற்றும் 35% வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கியது.
இந்த வழக்குகள், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் 85 சதவீத கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிவழங்கியுள்ளது. கட்டணம் செலுத்தாதவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறினர்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அது தமிழகத்துக்கு பொருந்தாது. உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து என தெரிவித்தார்.
தமிழகத்தை பொறுத்தவரை கட்டண நிர்ணயக்குழு அளித்த பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கும் என கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.