தமிழகத்தில் உருவாகும் டாடா நிறுவனத்தில் தமிழர்களுக்கே முன்னுரிமை.! – அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி.!
டாடா நிறுவனம் போல தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிற தொழில் நிறுவனங்களும், தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதை, தமிழ்நாடு அரசு உறுதி செய்ய உள்ளது.- அமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழகத்தில் அமைக்கப்படும் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இருக்கும் தோலர்ப்பூங்காவில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது வரை 5,500 தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கு மொத்தமாக 18 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு இருக்கிறது.
இந்த தொழிற்சாலையானது முழுமையாக முடிக்கப்பட்டு உற்பத்தியை தொடங்கும் போது தேவைப்படும் தொழிலாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்போவதாக அந்நிறுவனம் உறுதி கொண்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் அந்நிறுவன அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது எனவும் அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
அந்நிறுவனம், சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. அந்த முகாமில் 7,559 பேர் பங்கேற்றனர் இதில் 1,993 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிற தொழில் நிறுவனங்களும், தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதை, தமிழ்நாடு அரசு உறுதி செய்ய உள்ளது. என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.