பிரதமரின் திருச்சி பயணம்… நாளை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்.. ரூ.19,850 கோடியில் திட்டங்கள்!

Prime Minister Narendra Modi

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை (ஜனவரி 2) பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார். நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, ரூ.1,100 கோடி மதிப்பில் திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைக்கிறார். இதன்பின், நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 38வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார்.

இதனைத்தொடர்ந்து, நண்பகலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். இதில், பல்வேறு புதிய ரயில் திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்.

அதன்படி, சேலம் – மேட்டூர் இடையே 41 கிமீ தூரம் இரட்டை  ரயில் பாதையை நாட்டுக்கு அர்பணிக்கிறார். திருச்சி – விருதுநகர், விருதுநகர் – தென்காசி, செங்கோட்டை – தென்காசி, திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இதுபோன்று, தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள திருச்சி – கல்லகம், கல்லகம்-மீன்சுருட்டி, செட்டிகுளம் – நத்தம், காரைக்குடி – ராமநாதபுரம், சேலம் – திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகிய 60 கிமீ சாலை திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மேலும், காமராஜர் துறைமுகத்தில் 2வது ஆட்டோமொபைல் ஏற்றுமதி இறக்குமதி முனையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு

முகையூர் – மரக்காணம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ரூ.9,000 கோடி மதிப்பிலான எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். அதாவது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் செங்கல்பட்டு முதல் தூத்துக்குடி வரையிலான 488 கி.மீ., நீள இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் விஜயவாடா-தருமபுரி பெட்ரோலிய குழாய் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், முற்றிலும் இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள ரூ.400 கோடி மதிப்பிலான விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 500 படுக்கைகள் கொண்ட மாணவர் விடுதியையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

எனவே, நாளை பிரதமர் மோடி வருகையையொட்டி, 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழாக்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் வழித்தடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை செய்து வருகின்றனர். பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர். அதேபோல, பாஜக சார்பிலும் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்