விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு..!
சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
சென்னை வந்தடைந்தார் பிரதமர் :
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
பன்னாட்டு முனையம் :
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. ரூ.1,260 கோடி செலவில் சர்வதேச தரத்தில் அழகிய வடிவில் கட்டப்பட்டுள்ள முனையத்தை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் :
பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்த பிரதமர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை–கோவை வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இந்நிகழ்வின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வந்தே பாரத் ரயில் கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு சேலம் நின்றுவிட்டு நண்பகல் 11.50 மணிக்கு சென்னை வந்தடையும். பிறகு, சென்னையில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
125-வது ஆண்டு விழா :
இதனைத்தொடர்ந்து, ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றி வருகிறார். முன்னதாக இந்த நிகழ்வு ராமகிருஷ்ணா மடத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பிரதமரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறுகிறது.
இதில் பிரதமர் மோடிக்கு விவேகானந்தரின் முழு உருவச்சிலையை ராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகிகள் பரிசளித்தனர். இந்த நிகழச்சியில் தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.