பிரதமரின் தேர்தல் பரப்புரை பேச்சுகள் மலிவானதாக உள்ளது! இரா. முத்தரசன் விமர்சனம்!
சென்னை : பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரை பேச்சுகள் மலிவானதாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இரா. முத்தரசன் கூறியுள்ளார்.
கடந்த மே 20-ஆம் தேதி ஒடிசாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போனது பற்றி பேசியது பேசுபொருள் ஆகி உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இரா. முத்தரசன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது “பிரதமர் மோடி குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்தி, மதிக்க வேண்டும். அது தான் சமய சார்பற்ற பண்புகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அமைப்பு சட்டபூர்வ கடமைப் பொறுப்பாகும். ஆனால், பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை பேச்சுகள் மலிவானதாகவும் தரம் தாழ்ந்தும், குடிமக்களை பிளவுபடுத்தி மோதவிட்டு ரத்தம் குடிக்கும் “நரத்தனம்” கொண்டதாகவும் அமைந்துள்ளது.
பிரதமர் மோடி ஒடிஷாவில் மக்களிடம் பேசிய ஆன்மீக நம்பிக்கையாளர்களின் உணர்ச்சிகளை தூண்டி, தேர்தல் ஆதாயம் தேடும் முயற்சியில், நம்பிக்கையுடனும் பெரும் எதிர்பார்ப்பிலும், தேடி வரும் தொலைந்து போன பூரி ஜெகநாதர் ஆலயத்தின் கருவூலச் சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாக பேசி இருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் மீது தீரா பழி சுமத்தும் இழிவான செயலில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் பிரதமர் பொறுப்பை உணர்ந்து மோடி நாவடக்கி பேச வேண்டும் என எச்சரிக்கிறது” என கூறப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் மோடி ஒடிசாவில் பேசியதாவது ”நம்மளுடைய வீட்டு சாவி காணாமல் போய்விட்டது என்றால் நாம் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால், 6 ஆண்டுகளாக ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி காணாமல் போய்விட்டது. மக்கள் இந்த சாவி தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்” என பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.