பகீர்..”பிரதமர் மோடி ஆட்சி…தமிழகத்தை 2 ஆக பிரித்து விடுவோம்” – பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருத்து!
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து,கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும்,,காவல்துறை மரணங்கள் அதிகரித்துள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில்,சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், கோவையில் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,பாளையங்கோட்டையில் பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறுகையில்:”ஆந்திரா,தெலுங்கானா போன்று நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என இனி போராட்டம் நடைபெறலாம்.ஆகவே, தமிழகத்தை இரண்டாக பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம்” என்று கூறியுள்ளார்.இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா,மாநில சுயாட்சி வழங்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்ததை சுட்டிக் காட்டி நயினார் நாகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில்,தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சிக்கு ஆட்சியமைக்கும் எனவும்,அதைப்போல தென்னிந்திய மாநிலங்களான கேரளா,ஆந்திரா, ஒடிசா ஆகிய பிற தென்னிந்திய மாநிலங்களிலும் பாஜகவின் ஆட்சி விரைவில் மலரும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.